
தமிழின படுகொலையை நினைவுகூரும் வகையில் கனடா, பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11ஆம் திகதி தமிழின அழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (14) இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்த விடயங்களாவன,
இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை எதிர்ப்பதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை.
அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இந்தப் பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது.
2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் , 2006 இல் கனடாவானது தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது.
கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள சிங்க்வகௌசி பூங்காவில், தமிழ் இனப்படுகொலையைக் குறிக்குமுகமாக நினைவுச்சின்னமொன்றை நிர்மாணிப்பது குறித்து, இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
பிராம்ப்டன் நகர சபையின் இவ்வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இச்செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகிறது.
இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசு உறுதியாக நம்புவதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.