
ஆனையிறவு உப்பளமானது 26 வருடங்களின் பின்னர் அண்மையில் ஆளும் தரப்பினரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஆனையிறவு உப்பளத்தில் ‘ரஜலுணு’ என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது.
ஆனையிறவு உப்பு என்ற பெயரில் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட உப்பானது ரஜ உப்பு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டமையானது பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் ஆனையிறவு உப்பு என பெயர்மாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கணநாதன் இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி உள்ளிட்ட ஆளும் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
எனினும் குறித்த உப்பானது தற்போது ரஜ உப்பு என்ற பெயரிலேயே விநியோகம் செய்யப்படுகின்ற விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் வலி வடக்கு, வடபகுதி பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஊடாக நியாயமான விலையில் உப்பு விநியோகம் இடம்பெறுகிறது.
விற்பனை செய்யப்படும் உப்பு பைகளை வலி வடக்கு, வடபகுதி பல நோக்கு கூட்டுறவு சங்கம் தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அதில் ரஜ உப்பு என்றே காணப்படுகிறது.
இந்த விடயமானது ஆளும் தரப்பினர் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லா தன்மையை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பொய் உரைத்து வருவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஆனையிறவு உப்பின் பெயர் இன்னும் மாற்றம் செய்யப்படவில்லை என தெரிவித்தும் மற்றும் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டியும் ஊழியர்கள் ஆனையிறவு உப்பளம் பகுதியில் நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில் விரைவில் ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உப்பளத்தின் உப்பை பெற்றுக் கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனையிறவு உப்பளம் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை அடுத்து அங்கு விஜயம் செய்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,
ஆனையிறவு உப்பளத்தில் இதுவரையில் உப்பு உற்பத்தியினை முழுமையாக செய்யப்படவில்லை. தற்பொழுது உப்பு உற்பத்தி செய்யும் இயந்திரம் பழுதடைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக இதற்கான உதிரி பாகங்கள் இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு தற்பொழுது கொழும்பை வந்தடைந்துள்ளன.
ஓரிரு தினங்களில் உப்பளத்தின் உப்பு உற்பத்தி மீண்டும் செயல்பட ஆரம்பித்த பின்னர் நியாயமான விலையில் ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உப்பளத்தின் உப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது நியாயமானது. அவர்களுக்கான அடிப்படை உரிமை.
போக்குவரத்து வசதி என்பவற்றை உப்பு உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் படிப்படியாக பணியாளர்களுக்கான அனைத்து நன்மைகளும் வரப்பிரசாதங்களும் பெற்றுக் கொடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.