இலங்கையின் இறையாண்மையில் தலையிட வெளியாட்களுக்கு அருகதையில்லை. எமது போர் வீரர்களைக் கொச்சைப்படுத்தவும் அவர்களுக்குத் தகுதியில்லை. அதேவேளை, சர்வதேசத்துக்கு அடிபணிந்து போகவும் நாம் தயாரில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போர் வெற்றி விழாவில் படையினருக்கும் நாட்டுக்கும் எதிராக சர்வதேச நிறுவனங்கள் அல்லது சர்வதேச அமைப்புகள் அழுத்தங்களைத் தொடர்ந்து பிரயோகித்தால் அவற்றின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ளத் தான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றியிருந்தார். அவரின் உரைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“சர்வதேசம் எம்மீது தொடர் அழுத்தங்களைப் பிரயோகித்தால் சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையிலிருந்து நாம் வெளியேறுவதில் தப்பேதும் இல்லை. இதைத்தான் ஜனாதிபதி வெளிப்படையாகக் கூறியுள்ளார். எனவே, இதற்கு எதிராக எதிரணியினர் கருத்துக்களை வெளியிடும்போது அவதானமாக இருக்க வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்திடம் நாட்டை அடகுவைக்க நாம் தயாரில்லை” – என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.