இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழிவுக்கு காரணமான புத்திஜீவிகள் தற்போது எதிர்க்கட்சி தலைவருடன் இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடை உடுகம்பள ரெஜி ரணதுங்க மண்டபத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வழமைக்கு திரும்பும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஜனாதிபதிக்கும் இடையில் மோதல் இருப்பதாகெ காண்பிக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்.
அப்படியான மோதல்கள் எதுவுமில்லை. எமக்கிடையில் அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருக்கலாம்.
ஜனாதிபதியை அந்த பதவிக்கு கொண்டு வர கட்சி என்ற வகையில் நாங்கள் ஆதரவை வழங்கினோம்.
அவரது அனுபவம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய இயலுமை என்பவற்றை ஆராய்ந்த பின்னரே அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.
இன்னும் 69 லட்சம் மக்களுக்காகவே நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம்.
இவ்வாறான நிலைமையில் அமைச்சு பதவிகள் கிடைக்காததால், சிரேஷ்ட உறுப்பினர்கள் விரக்தியடைந்திருக்கலாம்.
ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட நிலைமையுடன் தற்போதைய நிலைமையை ஒப்பிட்டு பார்க்கும் போது அன்று நாங்கள் எடுத்த முடிவு சரியானது என உணர்கின்றோம்.
இதனால், ஜனாதிபதியின் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆதரவளிப்போமே அன்றி, அவரது காலை பிடித்து இழுக்க மாட்டோம்.
ஜனாதிபதி பிரபலமான தீர்மானங்களை எடுக்கவில்லை. நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்தித்தே அவர் முடிவுகளை எடுக்கின்றார். 2048 ஆம் ஆண்டுடின் பொருளாதார அபிவிருத்தி பற்றி அவர் பேசுகின்றார்.
நீண்டகாலம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அவரது நோக்கமல்ல. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கையாள வேண்டிய வழிகளை அவர் திறந்துள்ளார்.
இதனை புரிந்துக்கொள்ளாத அரசியல் அநாதைகள் எங்கள் மீது சேறுபூசுகின்றனர்.
தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கமே இருக்கின்றது” எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.