தமிழினத்தினை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கூடாது என்பதில் சிங்கள அரசு உறுதியாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
இன்று வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் சிறுவர் கழக பயிற்சி பட்டறை ஒன்றில் விருந்தினராக கலந்து சிறப்பித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் பாரிய பொய்யினை பேசியுள்ளார். இது தொடர்பில் பலர் தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் தமிழர்கள் பற்றி பேசியதெல்லாம் உண்மைக்கு புறம்பானது, போராட்டக் காலங்களிலும் இவ்வாறே வெளிநாடுகளில் நடந்தது.
முன்பு இந்த வளர்முக நாடுகளுக்கு கூட்டங்கள் பிரான்சில் நடப்பது வழமை. அங்கே பல கண்துடைப்புகள் இந்த சிங்கள அரச தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
அதன் பின் அவர்கள் நாடுகளுக்குச் செல்கின்ற பொழுது ஏனைய நாட்டினுடைய தூதுவர்களுக்கு இந்த செய்திகள் போய்ச்சேரும். இதன் மூலம் தமக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொண்டு இங்கு வந்து தலைகீழாக நடப்பர். இது தான் நான் கண்ட உண்மை மட்டுமன்றி, இது ஒரு வரலாற்று உண்மை.
அன்று அவர்கள் வெளிநாடுகளில் போய் பேசுகின்ற பொழுது டிஜிட்டல் உலகம் இல்லை இன்று டிஜிட்டல் உலகம் இருக்கின்றது. இன்று ஜனாதிபதி எங்களை ஏமாற்றிவிடமுடியாது.
காணாமல் போனோர் அலுவலகம் மிக சிறப்பாக இயங்குகின்றது அது உண்மையற்றது என்று அனைவருக்கும் தெரியும். பாதிக்கப்பட்ட உறவுகளை மேலும் பாதிப்பிற்குள்ளாக்குவது போல இவருடைய கருத்துக்கள் அமைந்துள்ளன.
எந்த காலத்திலும் எங்களுக்குரிய காணி மற்றும் எங்களுக்கு தேவையான அடிப்படை தீர்வினை இவர்கள் வழங்கபோவதில்லை.
தற்பொழுது தொல்பொருள் திணைக்களத்தினுடைய இராஜினாமா உண்மையா அல்லது பொய்யா என்பது போகப்போகத் தான் தெரியும். தொல்பொருள் திணைக்களத்தினுடைய காணி சுவீகரிப்புகள் அவர்களுடைய நடவடிக்கைகள் முற்றுமுழுதாக தமிழருக்கு எதிராக இருக்கும் காணி தொடர்பில் தீர்வு எட்டிவிட்டதாக சர்வதேச சமூகத்திற்கு திரித்து கூறுகின்றார்கள். எனவே இவை காலத்தை கடத்துகின்ற செயலாகும்.
ரணில் விக்ரமசிங்க அடுத்த தேர்தலை மையப்படுத்தி செயற்படுகின்றார் . தமிழர்கள் நாமும் ஏமார்ந்து பழக்கப்பட்டு விட்டோம். ஆனால் தமிழினத்திற்கு புத்திசாலித்தனமான ஒரு இளைஞன் வந்தான் மிக நன்றாக மிகத்துல்லியமாக இந்த பெரும்பான்மையின அரசியல்வாதிகளை பற்றி அக்குவேறு ஆணிவேறாக பிரித்து தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் காட்டினான்.
இன்று எங்களை சிறிலங்கன் என்று சொல்ல சொல்கின்றார்கள்.
எமக்கான உரிமைகள் வழங்கபட்டதா, இந்த நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை தமிழினத்தினை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்ககூடாது என்பதில் இறுக்கமாக இருக்கிறது சிங்கள அரசு. எம்மையே நாம் ஆளக்கூடிய அதிகார பகர்வு வழங்கப்பட வேண்டும்.
இந்த 13 வது திருத்தத்தினை நடைமுறைபடுத்த சொல்லும் இந்திய அரசினையே எவ்வளவு எளிதாக ஏமாற்றி வருகின்றது இந்த அரசு. ஆக இந்தியாவும் இதில் வெட்கி தலைகுனிய வேண்டும். இன்று உங்களையே இந்த அரசு ஏமாற்றுகின்றது என்றால் எங்களை எவ்வளவு தூரம் நசுக்கும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.
மேலும் சீனாவிற்கும் எமக்கு என்ன நடந்தது என்று தெரியும் ஆனால் சீன அரசு அமைதியுடன் இலங்கை அரசுடன் இணைந்து நிற்கின்றது
இதற்கு கைமாறாக தனது நாட்டு மக்களுக்கு ஒரு தனியான அதிகார பகிர்வை கூட வழங்கமறுக்கும் இந்த சிங்கள அரசு சீனாவின் போட் சிட்டிக்கு தனிசட்டம் இயற்ற முன்வந்து மொத்தத்தில் எம்மை நீங்கள் ஏமாற்றிய காலம் கடந்துவிட்டது.
இன்றும் சில தமிழ் அரசியல்வாதிகள் ரணில் விக்ரமசிங்கவிடம் கூலிக்காக வேலை பார்பதால்தான் தமிழரும் இணைந்து நிற்கின்றார்கள் என்ற விம்பம் சர்வதேசத்திற்கு எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.