வாழ்வாதாரத்தை இழக்கும் வடக்கு மீனவர்கள் – ரணில் ஊடாக மோடிக்கு அழுத்தம் வழங்கக் கோரிக்கை!

இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்லவுள்ளார்.

இவ்வாறு இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்தமாறு இந்திய பிரதமருக்கு வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஜனாதிபதிக்கு அழுத்தத்தை வழங்குவதோடு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அழுத்தங்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நெடுந்தீவு கடற்தொழில் சமாசத்தின் உறுப்பினர் சி.றொபின்சன் குருஸ், நெடுந்தீவில் சுமார் 850க்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அத்து மீறிய இந்திய ரோலர் படகுகளினால் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட கடற்தொழில் உபகரணங்கள் நாசமாக்கப்பட்டுள்ளது.

இந்தியா ரோலர் படகுகளின் அத்து மீறிய செயற்பாடு காரணமாக தமது வளங்கள் பாதிக்கப்படும் நிலையில் இதுவரை 250 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பல குடும்பங்களில் மனைவிமார்களுடைய தாலியை அடகு வைத்து பலர் வலைகளை வாங்கியுள்ள நிலையில் இந்திய ரோலர் படகுகளினால் குறித்த வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எமது ஆதங்கங்களை இந்திய பிரதமருக்கு பகிர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வலி வடக்கு கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் றீகன் கருத்து தெரிவிக்கையில், உள்ளூரில் அனுமதியற்ற சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது.

இதன் காரணமாக சிறிய மீன்கள் பெருமளவு தடை செய்யப்பட்ட வலைகளில் அகப்படுவதனால் அதனை கடலிலோ தரையிலோ வீசி விட்டு செல்கிறார்கள்.

அதன் காரணமாக கடற்தொழிலை நம்பி இருக்கும் பாரம்பரிய மீனவர்கள் கடலில் மீன் இனங்கள் பெருகாத நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply