ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கடிதத்தில் கையெழுத்திட மறுத்த சம்பந்தன்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைப்பதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எழுத்தியுள்ள கடிதத்தில் கையெழுத்திட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறு கோரி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

எனினும் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி சம்பந்தன் அதில் கையெழுத்திட மறுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் இதன் போது இந்திய பிரதமரை சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஜனாதிபதி, இந்திய பிரதமரை சந்திக்கும் முன்னர், குறித்த கடிதத்தை அனுப்பி வைக்கும் நோக்கில், ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி இந்த கடிதத்தை எழுதி இருந்தது.

அண்மையில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, புளொட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை உருவாக்கின.

எனினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி கூட்டணியின் பெயர் தொடர்பில் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply