மாதவனை மயிலுத்தமடு விவகாரம் – நீதிமன்ற தடை உத்தரவை சவாலுக்குட்படுத்தும் செயற்பாட்டில் பெரும்பான்மையினர்!

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் அதிதீவிரமாக பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்ற சுமத்தியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட புத்த விகாரை ஒன்று மீளவும் நிறுவப்பட்டு நேற்றைய தினம் விசேட பௌத்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதனை அடுத்து மாதவனை மயிலத்த மடு பகுதிக்கு விரைந்து வந்த பெரும்பான்மை இனத்தவர்களை சேர்ந்த பலருக்கு கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளும் துண்டு துண்டாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மாதவனை மயிலத்தமடு பகுதியில் இருக்கும் காணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் கால்நடைக்களுக்காக ஒதுக்கப்பட்ட காணியாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ந்து பண்ணையாளர்கள் குறித்த காணி விடயம் சம்பந்தமாக தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இருந்தாலும் மேல் நீதிமன்றம் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றங்கள் போன்றவற்றில் தடை உத்தரவு இருக்கின்ற போதிலும் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பெரும்பான்மை இனத்தவர்கள் புத்த விகாரை அமைத்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவது பெரும் சவாலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அண்மையில் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்கள் அனைவரது கவனத்திற்கு கொண்டு சென்றும் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றம் இன்றுவரை இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக இந்த நிலை இடம்பெறுகின்றமையினால் ஒரு இன முறுகலை ஏற்படுத்த கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி பொருளாக இருக்கும் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply