சனல் 4 ஊடக நிறுவனம் அல்ல திரைப்பட நிறுவனம் – நாமல் சீற்றம்!

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தேவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கோ ராஜபக்ஷவினருக்கோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியாக தாம் கொள்கையுடன் பயணிக்கிறவர்கள் எனவும் சந்தர்ப்பவாத அரசியலை நம்பி பயணிப்பவர்கள் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஸ்தாபித்து, ஈஸ்டர் தாக்குதலுக்கு ஒரு வருடத்திற்கு முன்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், கொள்கைகளுக்கு அப்பாற் சென்று தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தேவை தமக்கு இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக பயன்படுத்தப்பட்டது எனவும் இதற்கு அப்போது இருந்த புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டிருந்தது எனவும் சனல் 4வின் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது நல்லாட்சி அரசாங்கம் தான் ஆட்சியில் இருந்தது. ஜே.வி.பியும் அதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது எனத் தெரிவித்துள்ளார்.

அந்தக் காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட தாம் அனைவரும் எப்.சி.ஐ.டியிலும் பொலிஸ் நிலையத்திலும் சிறைச்சாலையிலும் தான் தமது பெரும்பாலான காலத்தை கழிக்க நேரிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இருக்கும் போது, ராஜபக்ஷக்கள் இணைந்து புலனாய்வுப் பிரிவின் தலைவரை தேடிப் பிடித்து எவ்வாறு ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்டிருக்க முடியும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்தோடு, ஈஸ்டர் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் அன்று எங்கு இருந்தார்கள் எனக் கேள்வியெழுப்பியதோடு, அதில் ஒரு பயங்கரவாதி ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர் என சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.

இன்னொருவர் ஜே.வி.யின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றில் இருந்த ஒருவரின் மகன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியானவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாரத்திற்கு கொண்டுவர செயற்படுவார்களா எனக் கேட்டுள்ளார்.

அப்படியானால், நீங்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாரத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்த தரப்பினராகத்தான் கருதப்படுகின்றீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சனல் 4 நிறுவனம் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து செயற்பட்டு வரும் ஒரு நிறுவனம் எனத் தெரிவித்துள்ளார்.

இதனை தாம் ஒரு ஊடகமாக கருதவில்லை எனவும் திரைப்படங்களை வெளியிடும் ஒரு நிறுவனமாகவே தாம் அதனைப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply