![](https://onlinekathir.com/wp-content/uploads/2025/02/Untitled-3-copy-1.jpg)
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தொடர்ச்சியான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சி ஆதரவாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் ஆதரவளித்து வருகின்றனர்.
போர் காலத்துக்கு பின்னர் தற்போது விகாரை கட்டப்பட்டுள்ள காணி தவிர ஏனைய காணிகளுக்கு மக்களை குடியேற இலங்கை இராணுவம் அனுமதித்திருந்தது.
மக்கள் குடிபெயர அனுமதிக்கப்படாத பகுதியிலேயே சட்டவிரோதமாக திஸ்ஸ ராஜமகா விகாரை இராணுவத்தினரின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது, அரசாங்க அதிபருக்கு திஸ்ஸ ராஜமகா விகாரை தொடர்பில், அகில இலங்கை பௌத்த மாக சங்கம் என்ற அமைப்பு அப்பட்டமான பொய்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அந்த கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ள நபர் இலங்கையின் புலனாய்வு பிரிவு ஒன்றில் முப்பது வருடங்களுக்கு முன்னதாக பணியாற்றிய ஒருவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த கடித்தில் முற்று முழுவதுமாக உண்மைக்கு புறம்பான வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு, இந்த காணிகளை பௌத்த காணிகளாக காட்டுவதற்காக புனையபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.