
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்ததுடன், அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்களையும் முன்மொழிந்தார்.
இந்த நிலையில் இன்று (18ஆம் திகதி) முதல் 25ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.
இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதிவரை குழுநிலை விவாதம் நடைபெற்று பின்னர் மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றப்படும்.
விவாதம் தினமும் காலை 9.30 முதல் பிற்பகல் 6.00 மணிவரை நடைபெறும்.
2025ஆம் நிதியாண்டிற்கான வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறை ரூ. 2,200 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7 சதவீதமாகும்.
அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவு ரூ. 7,190 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21.8% ஆகும். மேலும் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் ரூ. 4,990 பில்லியனாக (15.09%) இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.