
பொது மக்களுக்காக விசேட தலதா காட்சிப்படுத்தல் ஒன்றை சித்திரைப் புத்தாண்டின் பின்னர் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.
ஜனாதிபதி நேற்று (23) கண்டி தலதா மாளிகையை தரிசித்த பின்னரே இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் கலந்துரையாடியதாகவும், மத்திய மாகாண ஆளுநர், கண்டி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தலதா மாளிகையின் தியவடன நிலமே ஆகியோர் இணைந்து அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு இணங்கியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி,
நாட்டின தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென தெரிவித்தார்.
பாதாள குழுக்களிடையே மோதல்கள் வலுப் பெற்றிருந்தாலும் அது பொதுமக்களின் பாதுகாப்புக்குக்கு சிக்கலாக அமையவில்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதுவரையில் அரசியல் அனுசரணையில் வளர்ச்சி கண்ட பாதாள குழுக்களை முழுமையாக கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவித்தார்.
அதேபோல் உள்ளூராட்சி தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எந்தவித சட்ட ரீதியான தடைகளும் இல்லையென்றும், அதற்கு தேவையான நிதியையும் அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படுமெனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.