
ஒன்பது மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (25) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஜூலை 16, 2016 அன்று கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதை ஒழிக்க வேண்டும்” எனக் கூறியதால், இன நல்லிணக்கத்தை மீறும் வகையில் இந்த அறிக்கையை வெளியிட்டதாகக் கூறி தண்டனைச் சட்டத்தின் பிரிவு 291 இன் கீழ் ஞானசார தேரருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அதன்படி இஸ்லாம் மதத்தை அவமதித்து கருத்து வெளியிட்டதற்காக ஜனவரி ஒன்பதாம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஞானசார தேரரை குற்றவாளி என்று கூறி, கொழும்பு கூடுதல் நீதவான் பசன் அமரசேன தீர்ப்பை அறிவித்தார்.
ஞானசார தேரருக்கு ஒன்பது மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படத்துடன், கூடுதலாக 1,500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி, ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கோரி இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.