
நாட்டில் தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக, பல மாவட்டங்களில் 7,000ற்கும் அதிகமான மக்கள் குடிநீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த 7,258 பேர் குடிநீர் இல்லாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை மாவட்டத்தில் மதுகம பிரதேச செயலாளர் பிரிவிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் வெலிகெபொல, எஹெலியகொட, கலவான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்களும் இவ்வாறு குடிநீர் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் நிலவும் வறண்ட காலநிலை தொடர்பாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் கருத்து தெரிவித்தபோது,
12 மாவட்டங்களில் 49 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. விசமிகளால் இவ்வாறு தீ வைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த தீ வைப்புகளைச் செய்யும் நபர்களை சட்டத்தின் பிடியில் கொண்டுவர வேண்டும். அதற்காக, இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு நான் மக்களிடம் கோருகிறேன் என தெரிவித்தார்.