
எரிபொருள் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிற போதிலும், எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர்களே எரிபொருள் தட்டுப்பாடு நிலையை திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
மீண்டும் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்பதற்காக ஒரு சில எரிபொருள் நிலையங்களில் வரிசைகள் உருவாகியுள்ளன.
ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
சில பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டமைத் தொடர்பில் தெரியவந்ததை அடுத்து விரைந்து அப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
எனினும் தற்போது எவ்வித சிக்கலும் இல்லை. அவசியமான எரிபொருள் எம்மிடம் உள்ளது. கடந்த அரசாங்கங்களில் அமைச்சுப் பதவியை வகித்தவர்கள் மற்றும் அவர்ளுடன் தொடர்புடையோருக்கு சொந்தமாக பல எரிபொருள் நிலையங்கள் உள்ளன.
அதை இந்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர்கள் திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர். எரிபொருள் கூட்டுத்தாபனத்துடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட உள்ளோம்.
எரிபொருள் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனமாகும். மக்களின் பெரும்பான்மை ஆனையை பொறுப்பேற்று அரசாங்கம் செயல்படுகிறது. ஏனைய சிறு குழுக்களின் செயல்களைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.