ரணிலும் சஜித் பிரேமதாசவும் இணைய வேண்டும் – இராதாகிருஷ்ணன்

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டனில் இன்று (30.09.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நல்லாட்சியின் போது அரச தலைவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. அதனால் ஏற்பட்ட விரக்தியாலேயே 69 இலட்சம் பேர் மொட்டு கட்சிக்கு வாக்களித்தனர்.

ஆனால் இன்று மொட்டு கட்சி தலைமையிலான அரசாங்கமும் கொள்கையின்றி செயற்படுகின்றது. நாட்டை ஆள்வது அரசாங்கமா அல்லது வர்த்தக மாபியாக்களா என தெரியவில்லை. பல பிரச்சினைகள் உருவாகின்றன.

இந்நிலையில் ஒரு பிரச்சினையை மறைப்பதற்காக மற்றுமொரு பிரச்சினையை தோற்றுவிக்கும் தந்திரத்தை அரச தரப்பினர் கையாண்டு வருகின்றனர்.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மறக்க செய்வதற்காக தற்போது மற்றுமொரு தாக்குதல் பற்றி தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

அதேவேளை,  மலையக மக்கள் முன்னணியில் இருந்து விலகிச்சென்றவர்கள் மீள கட்சியில் இணையலாம் என திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பலரும் இது தொடர்பில் எம்மை தொடர்பு கொண்டுள்ளனர்.

தவறை உணர்ந்து, கொள்கையை ஏற்று அவர்கள் இணைந்துகொள்ளலாம். கட்சியை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir