இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த பாரிய விபத்து சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட போது அதன் பெட்டிகள் அருகில் பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் மேல் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, பெங்களூரில் இருந்து சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட ரயிலின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
மூன்று ரயில்கள் விபத்திற்குள்ளானதில் பலி எண்ணிக்கை 230யை கடந்துள்ளது எனவும், 900 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது, மீட்புப் பணகள் துரித கதியில் இடமபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் விபத்தில் 10 முதல் 12 பெட்டிகள் தடம்புரண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரமண்டல எக்ஸ்பிரஸ் ரயிலின் பி7 பெட்டியில் 22 பேரும், பி8 பெட்டியில் 9 பேரும், ஏ2 பெட்டியில் 31 பேரும் பயணித்துள்ளனர்.
பெங்களூர் – ஹவுரா ரயிலின் ஒரு பொதுப் பெட்டியும் 2 சரக்கு பெட்டிகளும் , ஏ1 பெட்டியும் தடம் புரண்டன.
இந்த விபத்தில் ஒரு கடுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுவதால் மீட்பு பணிகள் நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில ரயில் பெட்டிகள் மீது மற்றொரு ரயில் பெட்டிகள் சரிந்து வீழ்ந்துள்ளதால் மீட்புபணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பெட்டிக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் விபத்து தொடர்பில் அனுதாபம் வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.