ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் தேசிய மக்கள் சக்தி மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பன இணைந்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
அதற்கமைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை 7ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தேசிய மக்கள் சக்தி ராஜகிரியவில் உள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் நாளை மறுதினம் 8 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதகவும் அறிவித்துள்ளது.
தேர்தலை தாமதப்படுத்துவதே ஜனாதிபதியின் நோக்கமாக இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ள தேசிய மக்கள் சக்தி, தற்போது தேர்தலை நடத்தாததற்கு பொருளாதார அல்லது நிதி நெருக்கடி எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் மஹாபொல மாணவர் புலமைப்பரிசில் கொடுப்பனவு, வாழ்க்கைச் செலவு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தேர்தலில் போட்டியிடவிருந்த வேட்பாளர்கள் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். அது மாத்திரமின்றி தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.