அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் இலங்கை இராணுவ அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டள்ளதாக இலங்கை கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பூர் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவரும், போர் வீரர்கள் சேவை அதிகார சபையில் கடமையாற்றும் லான்ஸ் கோப்ரல் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு திருகோணமலை, சம்பூரில் இருந்து 25 பேர் கொண்ட குழு ஒன்று படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் நோக்குடன் பயணித்துள்ளது.
அந்நிலையிலேயே, இலங்கை கடற்பரப்பில் வைத்து அக்குழுவினரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் போதே இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர்களும் தொடர்புபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்தே, இராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் ஒருவரை வர்த்தக கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சட்ட விரோத பயணத்திற்கு தலா ஒருவருக்கு 5-15 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு மொத்தமாக மூன்றரை கோடி ரூபாய் வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.