ரணில் அரசாங்கத்திடம் தொல்லியல் இடங்களை ஒப்படைப்பது நரியிடம் கோழியை ஒப்படைப்பதற்கு சமம்!

குருந்தூர்மலை விகாரை உட்பட வடக்கு, கிழக்கில் அமைந்துள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்க வேண்டியிருப்பது பிரிவினைவாதிகளிடமோ, அடிப்படைவாதிகளிடமோ இருந்து அல்ல, தற்போதைய அரசாங்கத்திடம் இருந்தே என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தொல்லியல் திணைக்களம் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகள் கடமைகளை செய்ய முயற்சிக்கும் போது பிரிவினைவாதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு தடையேற்படுத்துவதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை உட்பட வடக்கு,கிழக்கு மாகணங்களில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் இடங்கள் தொடர்பில் கட்சியின் தலைமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

குருந்தி விகாரை சம்பந்தமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த விடயங்கள் பொய்யானவை என்பதை ஒப்புவிப்பதற்காக தான் உட்பட கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி அங்கு செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வரலாறு பற்றி துளியும் அறிவில்லாத, தம்மை அறிவாளிகள் என காட்டிக்கொள்ளும் நபர்களிடம் இருந்து எமது உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் தொல்லியல் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரி தாங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி சபாநாயகரிடம் யோசனை ஒன்றை கையளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் சிறில் மெத்தியூ யுனேஸ்கோ அமைப்பு அனுப்பிய கடிதத்தில் வடக்கு, கிழக்கில் தொல்லியல் முக்கியத்துவமிக்க 27 இடங்கள் இருப்பதாக அறிவித்திருந்தார்.

ஆனால் தற்போது தொல்லியல் பெறுமதிமிக்க இடங்கள் அதனை விட அதிகரித்துள்ளன. இவற்றை அழிவுக்கு உட்படுத்துவதற்காக அரச அதிகாரிகள் நீதிமன்றங்களில் பொய்யான அறிக்கைகளை வழங்கி வருகின்றனர்.

இவற்றையெல்லாம் நாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், ஜனாதிபதி, தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளராக சாணக்கியன் இராசமாணிக்கத்தையும் கலாசார அமைச்சராக எம்.ஏ.சுமந்திரனையும் நியமிக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலங்களிலேயே வடக்கு, கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்கள் அழிக்கப்பட்டன.

இதனால், அவர் தலைமை தாங்கும் அரசாங்கத்திடம் தொல்லியல் இடங்களை பாதுகாக்க ஒப்படைப்பது, நரியிடம் கோழியை வழங்கியமைக்கு ஈடானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply