ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
ஊடகவியலாளர் கடந்த மே மாதம் 29ஆம் திகதி மருதானை சமூக கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்திருந்த விடயங்கள் தொடர்பாக வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளவே இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு விசாரணை மேற்கொண்டிருப்பது ஊடகங்களை அடக்கும் மற்றுமொரு நடடிக்கையாகும் என ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தினால் ஊடக ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டமூலம், சமூகவலைத்தள ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் போன்ற பல அடக்குமுறை சட்டமூலங்கள் பிரேரிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலேயே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
நேற்றைய தினம் காலை 10,30 மணிக்கு அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு விசாரணைக்காக சென்றிருந்தார்.
இது தொடர்பாக ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம் கண்டன அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டிருப்பது ஊடகங்களை அடக்கும் மற்றுமொரு நடவடிக்கையாகும்.
சில மாதங்களுக்கு முன்னரும் இவர் குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பதோடு, இது மூன்றாவது தடவையாகும்.
அதனால் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டதானது கருத்து தெரிவிக்கும் அடிப்படை உரிமைக்கு எதிரான செயலாகவே காண்கிறோம்” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.