உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரில்லா ஹோட்டல்களில் குண்டினை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரிகளான சகோதரர்களின் இளைய சகோதரரான மொஹம்மட் இப்ராஹீம் இஸ்மாயீல் சார்பிலான பிணைக் கோரிக்கையை நான்காவது தடவையாகவும் கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க இதற்கான உத்தரவை நேற்றைய தினம் பிறப்பித்தார்.
இப்ராஹீம் ஹாஜியார் எனப்படும் யூசுப் மொஹம்மட் இப்ராஹீம் உள்ளிட்ட மூவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றவியல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இப்ராஹீம் ஹாஜியார், மொஹம்மட் இப்ராஹீம் ஹிஜாஸ் அஹமட், மொஹம்மட் இப்ராஹீம் இஸ்மாயீல், ஆகியோரே இவ்வழக்கின் பிரதிவாதிகளாவர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் அறிந்திருந்தும் அது தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்காமல் தகவல்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் கீழ் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அதன்படி இந்த விவகார வழக்கானது நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது பிரதிவாதிகளில் முதல் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மன்றில் முன்னிலையானதுடன் மூன்றாவது பிரதிவாதி நீதிபதி முன்னிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது வழக்குத் தொடுநர் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம முன்னிலையானதுடன் பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணிகள் குழு முன்னிலையானது.
இதன்போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம, கடந்த தவணை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, மன்றில் வழக்கு ஆவணத்தை சமர்ப்பித்ததுடன், அதன் பிரதிகளை பிரதிவாதிகளின் சட்டத்தரணிக்கு மென் பிரதிகளாக இறுவெட்டுக்களில் பதிவு செய்து கையளித்தார்.
இதனைவிட, தெமட்டகொட மஹவில கார்ட்டன் வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, பொலிஸ் ஸ்தல பரிசோதகர்கள் எடுத்த புகைப்படங்களையும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் வழக்கு ஆவணத்தில் இணைத்து மன்றில் ஒப்படைத்தார்.
இதனையடுத்து, 3 ஆம் பிரதிவாதி தொடர்பில் முன் வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கை தொடர்பில் நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்தது.
3 ஆம் பிரதிவாதிக்கு பிணையளிக்க நீதிமன்றம் முன் எந்த விஷேட காரணிகளும் முன்வைக்கப்படவில்லை என அறிவித்த நீதிபதி நவரட்ன மாரசிங்க, பிணைக் கோரிக்கையை நிராகரித்தார்.
ஏற்கனவே பிரதிவாதி சார்பில் முன் வைக்கப்பட்ட 3 பிணை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதே நிலைப்பாட்டில் இந்த பிணை கோரிக்கையையும் நிராகரிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
அதன்படி இந்த விவகார வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி, முன்விளக்க மாநாட்டுக்காக எடுத்துக்கொள்வதாக அறிவித்த நீதிபதி, அதுவரை 3 ஆம் பிரதிவாதியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.