வீரமாநகர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் ஒன்று திருகோணமலை பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த சிறுமியின் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையதாக 25 வயது இளைஞர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதிவரை குறித்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த சிறுமி மார்ச் மாதம் அளவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமியின் உடல் அமைப்பிலும், நடத்தையிலும் சந்தேகம் கொண்ட பெற்றோர் சிறுமியிடம் விசாரணை செய்தபோதே குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற பெற்றோர் குறித்த சம்பவம் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபரைப்பற்றியும் தகவல்களை வழங்கியதை அடுத்தே இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.