மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் போது, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், எங்கே எங்கே உறவுகள் எங்கே?, வீடுகளிலிருந்து கொண்டு சென்ற உறவுகள் எங்கே?, வெள்ளை வானில் கொண்டு சென்ற பிள்ளைகள் எங்கே?, ஓ.எம்.பியும் வேண்டாம், இலட்சமும் வேண்டாம், சரணடைந்த உறவுகள் எங்கே? உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,
“ஐ.நா.சபையின் 53 வது கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்று வருகிறது. எங்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு போராட்டங்களை முன்னெடுக்க முடியாது.
எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று ஐ.நா சபையை நங்கள் இவ்வளவு காலமும் நம்பி வந்தோம். ஆனால் அந்த நீதியும் தாமதமாகிறது. இந்த அமர்விலாவது எங்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும்.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நாங்கள் இந்த போராட்டத்தை வீதிகளில் நின்று முன்னெடுத்து வருகிறோம். ஆனால் எமக்கு எவ்வித நீதியும் கிடைக்கவில்லை.
நாங்கள் உயிருடன் இருக்கும் வரை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய போராட்டம் தொடரும்.
தற்போது மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றது. தற்போது முல்லைத்தீவிலும் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இராணுவ முகாம்களை அகற்றினால் இன்னும் அதிக மனித புதைகுழிகள் கண்டுபிடிக்க முடியும். பிடித்துக் கொண்டு சென்ற பிள்ளைகள் இல்லை என்றால் அவர்கள் தான் கொலை செய்து புதைத்திருக்க வேண்டும்.
இராணுவ முகாம்களில் புதைக்கின்றமையினால் தான் அவர்கள் காணிகளை விடுகிறார்கள் இல்லை.
அதனாலேயே சிங்கள மக்களை குடியேற்றவும், புத்தர் கோவிலை அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கின்றார்கள்.
இதன் காரணமாக மனித புதை குழிகள் மூடி மறைக்கப்படும். எனவே ஐ.நா.கூட்டத்தொடரிலாவது எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.