சர்வதேசத்திற்கு இனப்படுகொலையை நிரூபிப்பதற்கான ஆதாரமே கொக்குத்தொடுவாய் புதைகுழி!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தோண்டி எடுக்கப்படும் மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற இனப்படுகொலை சம்பந்தமாக தாங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் அறிக்கைகளைச் சமர்ப்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த மாத இறுதியில் துக்க நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்வுகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தும்படியும் கலந்தாலோசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி தோண்டப்படுகின்ற போது பல இடங்களில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இவை சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகாலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்களாகும்.

இதற்கு அரச மற்றும் சர்வதேச ஆணைக்குழு முறையாக இயங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மாநாட்டை நடத்துவது பற்றியும் உறுப்பினர்களையும் கிளைகளையும் பதிவு செய்வதைப் பற்றியும் இனப்படுகொலைக்கு ஒப்பான ஜூலைப் படுகொலைகளின் 40 ஆண்டு நிறைவு சம்பந்தமான நிகழ்ச்சிகளைப் பற்றியும் குறித்த குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது கட்சியின் யாப்பு திருத்தம், தேசிய மாநாடு உள்ளிட்ட சமகால விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

மேலும்,  தமிழ் அரசுக் கட்சியின் மாநாட்டு அமைப்பை அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட பின் மாநாடு நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது 7 இலட்சத்துக்கு மேற்பட்டோர் உதவித் தொகை நிறுத்தத்தால் முறையீடுகள் செய்வதற்காகப் போராடுகின்றார்கள்.

அதைப் பற்றி மிக விரைவில் அரசுடனும் சர்வதேச மட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்களூடாகக் கலந்தாலோசிக்கப்படும் என குறிப்பிட்டார்.

இந்த குழு கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் பதில் செயலாளர் த.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், த.கலையரசன் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் , ஈ.சரவணபவன், அரியநேத்திரன், ஶ்ரீநேசன், சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply