மட்டக்களப்பில் புதிதாக திறக்கப்பட உள்ள 10 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு, ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்து ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு வவுண தீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதுபானசாலைகளுக்கு எதிராக மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அங்கத்தவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கிழக்கை அபிவிருத்தி செய்வதாகக் கூறியும் கிழக்கை மீட்கப் போவதாகக் கூறியும் அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள், மதுபானசாலைகள் திறப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் குறித்த மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் பல சுற்றுலா துறையை மேம்படுவதற்கான வேலை திட்டங்கள் இருக்கின்ற போதிலும் மேலும் மேலும் அப்பாவி மக்களது வாழ்வாதாரத்தை சுரண்டும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் குறித்த மதுபான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பி உள்ளனர்.
எது எவ்வாறாக இருந்தாலும் மக்களுக்கு நலன் தருகின்ற அபிவிருத்திகளை மேற்கொள்வதை விடுத்து மக்களின் பணத்தை சுரண்டுவதிலும் மக்களை மென்மேலும் துன்பத்தில் தள்ளுவதுமான செயற்பாடு கிழக்கில் தற்போது அரங்கேறி வருகின்றது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த மதுபானசாலைகளுக்கான அனுமதி பத்திரங்கள் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சரின் நெருங்கிய சகா ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மதுபானசாலை அனுமதி பத்திர விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் மௌனம் சாதிப்பதாகவும் மக்கள் குற்ற சுமத்தியுள்ளனர்.
எது எவ்வாறாக இருந்தாலும் இந்த மதுபானசாலைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக தங்களுக்கு தொடர்பு இல்லை என்றால் அதை ஊடகம் மூலமாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவர்களது கடமை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதால், அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் வலுவாக இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இன்றைய தினம் வவுண தீவு பகுதியில் சிறிய ஒரு எதிர்ப்பை தெரிவிப்பதற்காகவே குறித்த ஆர்ப்பாட்டம் நடக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மதுபானசாலைகளின் அனுமதி பத்திரங்களை இரத்து செய்யாத பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்ட ரீதியா பாரிய போராட்டத்தை முன்னெடுக்க போவதாகவும் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.