13 என்ற கயிற்றை இந்தியா அறுத்து எறியும் தருணம் இது!

இலங்கை, 13வது திருத்தம் மூலம் இந்தியாவை சிக்கவைக்கின்றது எனவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கான இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளை கட்டுப்படுத்துகின்றது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான சர்வதேச சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு இந்தியா தலைமை வகிக்கவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதியை 21ஆம் திகதி சந்திக்கவுள்ள நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் பிரதமர் மோடிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

ஈழத்தமிழர்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளிற்கு இந்தியா தலைமை வகிக்கவேண்டும் என அந்தக் கடிதம் மூலம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இராணுவம் மற்றும் பொருளாதார பலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் சமச்சீரற்ற உறவை கருத்தில் கொள்ளும் போது இலங்கை போலித்தனத்தையும் மோசமான நம்பிக்கை இராஜதந்திரத்தையும் பின்பற்றுகின்றது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தின் மூலம் இந்தியாவை சிக்கவைக்கும் இலங்கையின் வெற்றிகரமான நகர்வுகளிற்கு இந்தியா அனுமதியளிக்க கூடாது.

13ஆவது திருத்தம் என்ற கயிற்றை இந்தியா அறுத்து எறியவேண்டிய தருணம் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1983ம் ஆண்டு ஆரம்பித்த கறுப்பு ஜூலையின் 40 வருட நினைவு தினத்திற்கு முன்னர் பிரதமர் மோடி இலங்கை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதை தனது கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply