கொழும்பு மாவட்ட அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் காணியை தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் அபகரிப்பதற்கு முயற்சித்துள்ளது.
இந்நிலையில், களத்துக்கு விரைந்த, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தடுத்து நிறுத்தியுள்ளார்.
மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணியை சுற்றி முள்வேலி அமைத்து, அதற்குள் மண் அகழ்வு இயந்திரம் மூலம் துப்பரவு செய்து, குழி தோண்டி புதிய இறப்பர் கன்றுகளை நட்டு, புசல்லாவ பெருந்தோட்ட நிறுவனத்திடமிருந்து, உள்குத்தகைக்கு பெற்றுவதற்கு தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இதுகுறித்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் தெரிவித்த முறைப்பாட்டை அடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் பெருந்தோட்ட நிறுவனத்தின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு செல்லும் முன், முதலில் அவிசாவளை பிரதேச செயலகத்துக்கு சென்று பிரதேச செயலாளர் தில்ஹானியை சந்தித்த மனோ கணேசன், மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணியை பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறி உள்ளதாக பிரதேச செயலாளரை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மனோ கணேசன், நல்லாட்சியின் போது, கொழும்பு அவிசாவளை பென்றித் தோட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவில் அங்கு விபத்து ஏற்பட்டு, அயல் குடியிருப்பு மக்கள் பெரும் ஆபத்தை சந்தித்துள்ளனர் என சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனால், மாற்று இடம் ஏற்பாடு செய்து அதற்காக நான்கு ஏக்கர் காணியை அமைச்சரவை பத்திரம் சமர்பித்துத்தான் பெற்றேன். அதற்கான நிதியும் தனது அமைச்சினால் செலுத்தப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
இதைப் பயன்படுத்தியே இங்கே வாழும் தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கித் தரப்பட்ட இந்த நான்கு ஏக்கர் காணியை தோட்ட நிறுவனம் தந்திரமாக அபகரிக்க முயன்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை தான் மீண்டும் அமைச்சராகி இதை செய்ய வேண்டும் என அதிகாரிகள் நினைத்தார்களோ தெரியவில்லை எனவும் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.
அல்லது தான் மீண்டும் அமைச்சர் ஆக மாட்டேன் என அதிகாரிகள் நினைத்தார்களோ தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்தாலும், தனக்கு எதிரணியும் ஒன்றுதான். ஆளும் அணியும் ஒன்றுதான் என அதிகாரிகளிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது காணி சுவீகரிப்பு முயற்சி தடுத்து நிறுத்தபட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் கலந்துரையாடி, காணிகளை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு தாம் பிரித்து வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.