இலங்கை அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பகிர்வை வழங்க நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.
தற்போதைய நாடாளுமன்றத்துக்கு மக்கள் ஆணை கிடையாது. இந்த ஜனாதிபதியும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல, எனவே மக்கள் ஆணை இல்லாதவர்கள் நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று கூறுவது மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையையே தோற்றுவிக்கும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற தொனிப்பொருளில் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கொழும்பில் உள்ள கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கறுப்பு ஜூலை சம்பவம் மீண்டும் நிகழக் கூடாது என்றால், அரசியல் உரிமை, அதிகார பகிர்வு என்பன நிறைவான வகையில் அர்த்தமுள்ள முறையில் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
இலங்கையில் கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று 40 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மீண்டும் அவ்வாறான ஒரு சூழல் தோற்றம் பெறாமல் இருப்பதற்கு உறுதியான நிலைபேறான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்ற போதும் நிலையான நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க நடைமுறைக்கு சாத்தியமான எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட பின்னர் இந்தியாவின் தலையீட்டுடன் 1987 ஆம் ஆண்டு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் அது கூட முழுமையாக இல்லாதொழிக்கப்படுள்ளது.
13 ஆவது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தும் போது அதற்கு நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.
அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அதனை நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று கூறுவது முறையற்றது.
அதிகார பகிர்வுக்கு நாடாளுமன்றத்திலுள்ள பெரும்பான்மை இடமளிக்காது என்பதை அறிந்தே, நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி கூறுகின்றார்.
நாட்டில் 2022 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் விளைவாக தற்போதைய நாடாளுமன்றத்துக்கு மக்கள் ஆணை இல்லை அது போலியான பெரும்பான்மையையே கொண்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதியும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல. எனவே தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு வழங்க நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என மக்கள் ஆணை இல்லாதவர்கள் கூறுவது மீண்டும் கறுப்பு ஜூலையையே தோற்றுவிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.