இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை சர்வகட்சி மாநாடு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
அத்துடன், தேசிய நல்லிணக்க வேலைத்திட்டத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது தமது கொள்கையல்ல எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தால் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தயார் என ஜனாதிபதி கூறியிருந்தார்.
சர்வகட்சி மாநாட்டுக்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வகட்சி மாநாட்டில் தேசிய நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் 13 ஆவது திருத்தம் குறித்து பேசப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் இணைவது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணி பங்கேற்காது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.