தனிநாடு கோரி நாட்டில் மீண்டும் குருதிக்களரியை ஏற்படுத்தவா கஜேந்திரகுமார் முயற்சிக்கின்றார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
இது ஒற்றையாட்சியுள்ள பௌத்த சிங்கள நாடு. இங்கு சமஷ்டிக்கோ, தனிநாட்டுக்கோ இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் இந்த அபரிமித ஆசையால் தான் பெருமளவான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழக்க நேர்ந்தது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் ஒற்றையாட்சியைக் கோருகின்றார்களா? சமஷ்டியாட்சி கோருகின்றார்களா? தனி நாட்டைக் கோருகின்றார்களா? என்பதை அறிய துணிவு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் சவால் விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சரத் வீரசேகர ஊடகங்கள் முன்னிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தை முன்வைக்கும் கஜேந்திரகுமார் எந்த நாட்டிலிருந்து கூறுகின்றார் என்பதை முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும் என எச்சரிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
தனிநாடு கோரிய விடுதலைப்புலிகளுக்கு இறுதியில் என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆகவே மீண்டும் தனி நாடு கோரி குருதிக்களரியை ஏற்படுத்த கஜேந்திரகுமார் விரும்புகின்றாரா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.