இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புதிய நகர்வில் அலி சப்ரி!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல தரப்பினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைத் தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மாத்திரமே அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்த அமைச்சர், சட்டம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவிற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் பணிகளை நிறைவேற்றுவதற்காக சர்வதேச மட்டத்தில் பல விரிவுரைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இடைக்கால செயலகம் அமைக்க ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக ஆணைக்குழுவின் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான அடித்தளத்தைத் தயார்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் அவசியத்தையும் அதனை ஸ்தாபிப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் விளக்கிய அமைச்சர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply