பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பப்புவா நியூகினியாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
பிரான்ஸுக்கு சொந்தமான 3 விமானங்கள் மூலம், நேற்றிரவு 11.35 அளவில், பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினர், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை வரவேற்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றிருந்த நிலையில், இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையே சுமார் ஒரு மணியத்தியாலமும், 15 நிமிடமும் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது.
இரு தலைவர்களுக்கும் இடையே, பிராந்திய மற்றும் பூகோள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும், அதனைத் துரிதப்படுத்துவதற்கும், அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இதற்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை விஜயம் தொடர்பில், பிரான்ஸ் ஜனாதிபதி தனது ட்விட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்து சமுத்திரத்தின் திறந்த, விரிவான மற்றும் சுபீட்சமான இந்து – பசுபிக் பிராந்தியத்தின் பொதுவான இலக்குகளை பகிர்ந்து கொள்ளும் இரண்டு நாடுகளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அதனை மீண்டும் உறுதிப்படுத்த முடிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான 75 வருடகால இராஜதந்திர உறவுகள் தங்களின் ஒருமைப்பாட்டிற்கான வலுவான இணக்கப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
2 மணித்தியாலமும் 9 நிமிடங்களும் என்ற குறுகிய நேரத்திற்கான இலங்கை விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி, இன்று அதிகாலை 1.44 அளவில் நாட்டிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
இதேவேளை, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா உள்ளிட்ட தூதுக்குழுவினர், நேற்றிரவு நாட்டை வந்தடைந்தனர்.
இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன், ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக, வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.