இலங்கையில் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் ஆணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சூளுரை விடுத்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்டத்தினை தொடர்ந்தே தாம் பதவி விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போராட்டத்தை வழி நடத்திய மூன்றாவது தரப்பின் சிலர் தோல்வியான இயற்கை பசளை தொடர்பான திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கியிருப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்டம் ஹிரியால தொகுதி அதிகார சபைக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அப்படி எதுவும் நடந்திருக்காவிட்டால் விவசாயிகளுக்காக போராடிய டி.ஏ. ராஜபக்சவின் புதல்வரான கோட்டாபய ராஜபக்ச, விவசாயிகளுக்கான உர மானியத்தை இரத்துச் செய்திருக்க மாட்டார் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
யார் என்ன கூறினாலும் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய இயற்கை பசளை திட்டம் முற்றிலும் தோல்வியான திட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கியது யார் என்பதை தேடி அறிய வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.