யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டாவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று மாலை ஆரம்பித்தது.
குறித்த போராட்டம் காரணமாக அப்பகுதியில், இலங்கை பொலிஸார் பெருமளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் போது, இன அழிப்பு இராணுவமே வெளியேறு, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி மண் தமிழர் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை இடித்து அகற்று போன்ற கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் அனைவரையும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பிரசார செயலாளர் காண்டீபன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி கடந்த மே மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.