நீதிமன்றின் அதிரடி உத்தரவையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்ட இம்ரான் கான்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க சொத்துகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் குறித்த உத்தரவை விடுத்துள்ளது. இதனையடுத்து இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

மேலும் அவர் அரசியலில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத வண்ணம் தகுதியிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் கடந்த 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய முக்கியக் கட்சி ஒன்று, எதிர்க்கட்சியுடன் இணைந்தது.

இதனால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

அதனையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார். பதவி இழப்புக்குப் பிறகு இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் கடந்த 2018 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்ட போது வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்களை விற்று கிடைத்த பணத்தை மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளது.

ஏற்கெனவே, இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமான காதிர் அறக்கட்டளை மூலம் ரூ.5,000 கோடி ஊழல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்த வழக்கில் இம்ரான்கானை கைது செய்ய ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply