பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதுடன் ஏறக்குறைய 100 பேர் காயமடைந்துள்ளதாகத் பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, 22 பேர் உயிழந்துள்ளதாகவும் 80 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாகவும் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளனர்.
உயிரிழப்பு குறித்து வருத்தம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், பஞ்சாபில் நடந்த அரசியல் கூட்டத்தின் போது, இறந்தவர்களின் ஆன்மாக்களுக்காகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்தார்.
விபத்தையடுத்து, ஏனைய ரயில் சேவைகளின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே துறை அமைச்சர் குவாஜா சாத் ரபிக் கூறினார்.
பாகிஸ்தானில் மோசமாகப் பராமரிக்கப்படும் ரயில் பாதைகளில் அடிக்கடி ரயில் விபத்துகள் நிகழ்கின்றன, அங்கு காலனித்துவ கால தகவல் தொடர்பு மற்றும் சமிஞ்ஞை அமைப்புகள் நவீனமயமாக்கப்படாமலும் பாதுகாப்பு தரங்கள் மோசமான நிலையிலும் உள்ளன.