வறட்சியால் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மக்களை அரசுக்கு எதிராக வீதிக்கு இறக்கி மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இரகசிய அறிக்கையொன்றை கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த போராட்ட அலையை உருவாக்குவதன் பின்னணியில் முந்தைய போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வேலைத்திட்டத்தினை சீர்குலைப்பதே குறித்த குழுவின் முக்கிய நோக்கம் என்பதையும் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சதியின் பின்னணியில் உள்ள குழுக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில ஊடகங்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ள புலனாய்வுப் பிரிவு, குறித்த ஊடக நிறுவனங்கள் மக்களை தூண்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் எதிர்க்கட்சி மற்றும் தமிழ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக புலனாய்வு பிரிவு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசங்கம் தண்ணீர் வழங்காது எனவும், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டி தண்ணீருக்காக போராட மக்களை வீதிக்கு இறக்குவதற்கு குறித்த குழு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக 12 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரை 48 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அது மாத்திரமன்றி கால்நடைகளுக்கும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த 12 மாவட்டங்களில் சுமார் 40 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு கொள்கலன்கள் மூலம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதுடன், 1 இலட்சத்து 56,000 ஆயிரம் பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், வைத்தியசாலைகளுக்கு குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நீர் மின் உற்பத்தி குறைவடையுமெனவும், இதன் காரணமாக மின் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமானளவு அதிகரித்துள்ளதாகவும், பாவனையாளர்கள் மின்சாரத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்த வேண்டுமென இலங்கை மின்சார சபை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், வறட்சி நிலை காரணமாக எதிர்காலத்தில் அனல் மின் உற்பத்தி அதிகரிக்கலாம் எனவும், இவ்வாறான நிலையில் சபையின் செலவினங்களை ஈடுசெய்வது பாரிய பிரச்சினை எனவும் மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.