தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது என்ற காரணத்தினால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில் அரசியல் தீர்வு என்பதையே இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தும் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவேண்டுமானால் முன்னைய காலத்தினைப் போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எதிர்வரும் கட்சியின் மாநாட்டில் எட்டவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியை பொறுத்தவரை ஒரு உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பில் அரசியல் தீர்வொன்று அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்துகின்றது.
அதன் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டால் அதன் மூலம் அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுவதற்கு தமது தரப்பு ஆதரவு வழங்க முடியும் எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.