இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குதல் என்ற போர்வையில் இலங்கையை இந்தியாவின் டிஜிட்டல் காலனியாக மாற்றுவதற்கும் இலங்கை மக்களின் அனைத்து தரவுகளையும் பெற்றுக்கொள்வதற்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக முன்னிலை சோசலிஸ்ட் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கண்டியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தினார்.
இலங்கையில் தற்போதைய அடையாள அட்டைக்கு, அரசாங்கம் சுயவிபரக்கோவையை மட்டுமே எடுக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இலத்திரனியல் அடையாள அட்டை சட்டமூலமொன்று கொண்டு வரப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பினால் தாமதமான போதிலும், நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் அங்கீகாரத்துடன் அதனை நிறைவேற்றியது எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இப்போது இந்த திட்டத்தின் நோக்கம் ஒடுக்குமுறை வழிமுறைகளை வலுப்படுத்துவது மட்டும் அல்ல இது பிராந்திய புவிசார் அரசியல் திட்டங்களுடனும் சிக்கியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் சனத்தொகைக்கு இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் மொத்தச் செலவு 41.05 பில்லியன் ரூபாவா எனவும் இந்தியா 22.33 பில்லியன் ரூபாயை மானியமாக வழங்க முன்வந்தது எனினும் அதற்கு இந்த திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் எனக் கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தை இந்தியாவிற்கு வழங்குவதன் மூலம், இலங்கையில் உள்ள அனைவரின் முக அம்சங்கள், குடும்ப விபரம், நோய்கள், எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள், வங்கிக் கணக்குத் தகவல்கள் உள்ளிட்ட சுயவிபரங்கள் இந்தியா வசமிருக்கும்.
இதனால் எதிர்காலத்தில் இலங்கை இந்தியாவின் காலனியாக மாறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 4 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. இதன் மூலம் டிஜிட்டல் போர் படையெடுப்பு தொடங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கான விலைமானுக்கோரல் இந்த ஆண்டு மே 8ம் திகதி கோரப்பட்டது. விலைமானுக்கோரலின் கடைசி திகதி ஜூலை 3 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நிறுவனத்தை குறிவைத்து அந்த திகதி பலமுறை மாற்றப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனடிப்படையில், ஓகஸ்ட் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ஜூலை 18ஆம் திகதிக்கு கொண்டு வரப்பட்டது. மீண்டும் ஓகஸ்ட் 1ஆம் திகதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஓகஸ்ட் 2ஆம் திகதிக்கு காலக்கெடு மாற்றப்பட்டது.
இந்த மாற்றத்தின் இரகசியம் என்ன எனக் கேளிவியெழுப்பியதோடு, ஓகஸ்ட் 2ஆம் திகதிக்குள் இரண்டு இந்திய நிறுவனங்கள் மட்டுமே விலைமானுக்கோரலுக்கு சிபாரிசுகளை சமர்ப்பித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
அந்த இரண்டு நிறுவனங்கள் மெட்ராஸ் செக்யூரிட்டி பிரிண்டர்ஸ் மற்றும் புரோட்டீன் டெக்னோலஜிஸ் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரம்பற்ற பொறுப்பை ஏற்க விதிக்கப்பட்ட அபத்தமான விலைமானுக்கோரல் நிபந்தனையால் மற்ற நிறுவனங்கள் முன்வரவில்லை என்பதால் இதற்கான விலைமானுக்கோரல் மெட்ராஸ் செக்யூரிட்டி பிரிண்டர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது.
இதேவேளை, கடந்த 2016ஆம் ஆண்டு இதே நிறுவனத்திற்கு மதுப்போத்தல்களில் ஸ்டிக்கர்களை அச்சிட விலைமானுக்கோரல் விடப்பட்டது. ஆனால் ஸ்டிக்கர்களை மாற்றி நம்பிக்கையை உடைத்தது மாத்திரமின்றி அரசாங்கத்திற்கு வருடாந்தம் சுமார் 60 பில்லியன் ரூபா கலால் வருமானம் இழப்புக்கும் வழிவகுத்தது.
குறித்த நிறுவனத்திற்கே அடையாள அட்டை விலைமானுக்கோரல் கொடுக்கப்பட உள்ளது. இந்த நிறுவனம் கென்யா, லைபீரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் தடை பட்டியலில் உள்ள நிறுவனமாகவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸிலும் இந்நிறுவனம் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. இது போன்ற ஒரு நிறுவனத்தின் மூலம் இந்தியா டிஜிட்டல் படையெடுப்பை இலங்கை மீது நடத்துகிறது என்பது தெளிவாகிறது என கூறியுள்ளார்.
எனவே, இத்திட்டத்தை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை நிராகரிக்குமாறும், அதற்கான தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் மக்களை கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.