சரத் ​​வீரசேகர இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர் – செல்வம் காட்டமான அறிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த நாட்டில் வசிப்பதற்கு தகுதியற்றவர் என டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி  சங் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.

இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குருந்தூர்மலை அல்லது குருந்தி தொல்பொருள் தளம் தொடர்பில் சரத் விரசேகர நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் அறிக்கைகளை வெளியிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

முடிந்தால் நாடாளுமன்றத்திற்கு வெளியே உரிய அறிக்கைகளை வெளியிடுமாறு சவால் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிவானின் புத்தி மழுங்கியுள்ளதாக பொருள்படும் வகையில் சரத் வீரசேகர கருத்துக்களைக் கூறியுள்ளார்.

இது சட்டத்துறையை அவமதிக்கும் செயலாகும் என்றும் செல்வம் அடைகலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் தெரிவித்தாலும் அது பொதுவான அறிக்கை என்று நினைக்க முடியாது எனவும் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.

இதேவேளை, வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களின் இருப்பை அழிக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மீண்டும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுமோ என்ற அச்சத்தில் தமது மக்கள் உள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் இனவாத கருத்துக்களை பரப்பும் பௌத்த பிக்குகள் இருப்பதாகவும், அரசியல்வாதிகள் அவர்களுக்கு பயந்து கருத்துக்களை வெளியிடும் நிலையில் இருப்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் வாழ தமிழர்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் இந்த மக்களை அழிக்க பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

இனவாத நெருக்கடியை தீர்க்கும் தேவை அரசாங்கத்திற்கோ அல்லது பெரும்பான்மை மக்களுக்கோ இல்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply