இலங்கையில், கொலை உட்பட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற 148 பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.
திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இடம்பெற்றது.
அதன் போது, திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான துறைசார் கண்காணிப்புக்கான நாடாளுமன்ற குழுவின் குற்றவியல் மற்றும் சட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் நாட்டை விட்டு வெளியேறிய குற்றவாளிகளை கைது செய்யுமாறு இலங்கை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சர்வதேச பொலிஸார் இந்த சிவப்பு அறிவித்தல்களை பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சந்தேக நபர்களில் சிலர் ஏற்கனவே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மரண தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்த சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், பல நாடுகள் மரண தண்டனையை நிராகரிப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மரணதண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தலை வழங்க மறுத்ததாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட குறிப்பிட்டுள்ளார்.