திட்டமிட்டு பழிவாங்கப்படும் ஊடகவியலாளர்கள் – பல் சமய ஒன்றியம் கண்டனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் சில ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக பல் சமய ஒன்றியத்தின் செயலாளர் க. ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று காலை மட்டக்களப்பு மட்டும் ஊடகமயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல் சமயம் என்ற ரீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் சமயமாக மக்களுடைய மாண்பிற்காகவும் அவர்களுடைய உரிமைக்காகவும் தாம் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பழிவாங்கலை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சுயாதீன செய்தியாளர் சசி புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அண்மையில்  அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை சசி புண்ணியமூர்த்தியிடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதோடு, அவர் ஊடகவியலாளர் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அரசாங்கத் தகவல் திணைக்கள ஊடக அடையாள அட்டை இல்லாத ஏனைய செய்தியாளர்கள் சிலரை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 4 ஆம் திகதி  இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கிழக்கு மாகாண ஆளுநரை மிஸ்டர் ஆளுநர் (Mr. Governor) என சசி புண்ணியமூர்த்தி விளித்துக் கூறியதாலும், கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பியமையாலுமே, கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி  இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

எனவே இது ஊடக சுதந்திரத்துக்கும் ஊடக ஜனநாயகத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய எச்சரிக்கை என பலதரப்பினரும் தொடர்ச்சியாக கண்டனம் வெளியிட்டு வரும் நிலையிலேயே, பல் சமய ஒன்றியத்தின் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply