சனல் 4 விடம் முக்கிய தகவலை கசியவிட்ட ஆசாத் மௌலானா – வெடிக்கவுள்ள பூகம்பம்!

இலங்கையில், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர், குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆசாத் மௌலானா பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு கிழக்கில் இடம்பெற்றதாகவும், அதில் தானும் கலந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தொலைக்காட்சி நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை ஒளிபரப்பப்படவுள்ள செனல் 4 “Sri Lanka’s Easter Bombings – Dispatches” என்ற ஆவணப்படத்தில் அவர் இந்த கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சாலே ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக மௌலானா தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் புகலிடம் கோரியிருக்கும் ஆசாத் மௌலானா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் தகவலை பகிர்ந்துள்ளார்.

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஒன்பது தற்கொலை குண்டுதாரிகள் 2019 ஏப்ரல் 21 அன்று மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் பல சொகுசு விடுதிகளில் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளை நடத்தினர்.

இதில் 270 பேர் வரையில் கொல்லப்பட்டதோடு,  500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெறுவதற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தாக்குதலை முன்னெடுத்துச் செல்ல அனுமதித்ததாக மௌலானா பகிரங்கப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், ஆசாத் மௌலானா புகலிடம் பெறுவதற்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறியுள்ள நிலையில், சுரேஷ் சாலே குற்றச்சாட்டை மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply