சனல்-4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் நேற்று அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியல் மட்டத்தில் மீண்டும் ஒரு சர்ச்சையினை கொண்டு வந்துள்ள சேனல் 4 காணொளி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சனல் 4 அலைவரிசையின் காணொளி தொடர்பில் அரசு என்ற ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச ரீதியாக இது தொடர்பில் தேவைகள் இருப்பின் அது குறித்தும் கவனம் செலுத்த அரசாங்கம் என்ற ரீதியில் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட முறையில் அமைச்சர் என்ற வகையில் மட்டுமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் எதிர்கட்சியில் இருந்து தான் கேள்விகளை தொடுத்தவர் என்ற முறையிலும் ஜெனீவா மனித உரிமைகள் குழு கூடும் கால கட்டத்தில் இவ்வாறான காணொளிகள் சனல் 4 அலைவரிசையில் இருந்து தொடர்ந்தும் ஒளிபரப்புவது வழமை தான் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளியில் உள்ள கருத்துக்கள் தொடர்பில் கட்டாயமாக ஆராய வேண்டும் என வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
காணொளியில் கூறப்படுவது போல் குறித்த திகதியில் குறித்த நேரத்தில் அவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதா இல்லையா என்பது முக்கியமாக ஆராயப்பட வேண்டியது எனத் தெரிவித்துள்ளார்.
சனல் 4 ஊடகத்தின் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் தேவை ஏற்பட்டால் சர்வதேச ரீதியிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.