யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் வைத்தியர்கள் தவறிழைத்திருப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலை பணிக்குழாமினரால் ஏதேனும் தவறுகள் ஏற்படுமாயின் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் உட்பட 6 பேரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.
மேலும் நால்வரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலை பணிப்பாளரும், சிறுமி சிகிச்சை பெற்ற விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளடங்கிய 6 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பதிவு செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
4 நாட்களுக்கு மேலாக தொடர்ந்த காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் 24 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் தொடர்ந்தும் நீடித்ததை அடுத்து அவர் கடந்த 25 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த சிறுமியின் உடலுக்கு மருந்துகளை செலுத்தும் கனுலா பொருத்தப்பட்டு அதனூடாக மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கனுலா பொருத்தப்பட்ட கை செயலிழந்தமையை அடுத்து கடந்த 2 ஆம் திகதி வைத்தியர்கள் அவரது இடது கையின் மணிக்கட்டுக்கு கீழான பகுதியை சத்திரசிகிச்சை மேற்கொண்டு துண்டித்திருந்தனர்.