உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தில் கூறப்பட்ட சமீபத்திய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அதேவேளை, பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் தொடர்பாக முன்னாள் சட்டமா அதிபர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

எவ்வாறாயினும் வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை மேற்கோள் காட்டி தொடர்ச்சியாக அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை கத்தோலிக்க திருச்சபை, பாதிக்கப்பட்ட தரப்பினர், சிவில் சமூக குழுக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் விமர்சித்துவருகின்றன.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பேசிய முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய பெரிய சதித்திட்டத்திற்கு தெளிவான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, பல தரப்பினரும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரியிருந்த அதேநேரம், அவர் இந்த ஆண்டு ஏப்ரலில் வாக்குமூலம் பதிவு செய்ய பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply