முதல் மீளாய்வுத் தேவைகளை பூர்த்தி செய்துள்ள இலங்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வுக்கு முன்னதாகவே பெரும்பாலான தேவைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் முதல்தவனை தொடர்பான மீளாய்வு மற்றும் உடன்படிக்கையை இறுதி செய்வது குறித்த கலந்துரையாடலை நேற்று நடத்தியிருந்தனர்.

இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 330 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உதவும் வகையில் ஊழியர் மட்ட ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.

இம்மாதம் 14ஆம் திகதி இலங்கை வந்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு, மார்ச் மாதம் அங்கீகரிக்கப்பட்ட வேலைத்திட்டம் தொடர்பில் பலதரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டது.

அதன்படி நேற்று கொழும்பில் இடம்பெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் போது அரச வருவாயை அதிகரிக்க இயலாமை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தொடர்பான விவாதங்கள் தொடங்கியதில் இருந்து அரச வருவாயை அதிகரிப்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.

வரி முறைகளில் முன்மொழியப்பட்ட திட்டங்கள் திருப்திகரமாக இல்லாத நிலையில் வரி வரம்புகளை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த வாரம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, வரி வருவாயை அதிகரிப்பதில் முன்னேற்றம் ஏற்படவில்லை என ஒப்புக்கொண்டிருந்தார்.

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர், சீர்திருத்தங்கள் மற்றும் பிற இலக்குகளை அடைவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டியுள்ளனர்.

பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், முந்தைய உடன்படிக்கையில் சில இலக்குகளை இலங்கை அடையத் தவறியதால், இம்முறை கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், 48 மாதம் நீடிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக சுமார் 3 பில்லியன் டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

நிர்வாக சபையின் முடிவை அடுத்து மார்ச் மாதத்தில் முதற்கட்டமாக சுமார் 333 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்ட நிலையில் ஜூன் இறுதி வரை திட்டத்தின் செயல்திறனைப் பரிசீலித்த பின்னர் அடுத்தகட்ட கடன்தொகை வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply