இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு என்பதை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் பிரதிபலிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நேற்றைய தினம் தமது பதவியிலிருந்து விலகி இலங்கையை விட்டு வெளியேறியிருந்தார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் இந்த தீர்மானம் குறித்து பலர் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், நீதித்துறை சுயாதீனத்தன்மையை இழந்து விட்டதாக தமிழ் அரசியல்வாதிகள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த பின்னணியில், போலி தேசியவாதிகளின் நீதிபதிகளை நாடாளுமன்றத்துக்குள்ளும் நாடாளுமன்றுக்கு வெளியிலும் வெளிப்படையாக தாக்கியதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், சிங்கள அரசியல்வாதிகளும் குடிசார் செயற்பாட்டாளர்களும் இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க தவறியுள்ளதாகவும் இதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சரியான பதிலை வழங்க தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சட்டத்தின் ஆட்சி என்பது அதிகாரப்பகிர்வு மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற மாற்றுக் கருத்துகளை கொண்ட விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை, இலங்கையில் எஞ்சியிருந்த சட்டத்தின் ஆட்சிக்கு நேரடி சவால் விடுக்கும் வகையிலான செயல் என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஜேர்மனிக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய்ராஜரத்தினம் ஆகியோர் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.