மட்டக்களப்பில் சமூக செயற்பாட்டாளருக்கு உயிர் அச்சுறுத்தல்!

மட்டக்களப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு மர்ம நபர்களால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரானில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று இரவு வந்த ஆயுதம் தாங்கிய இனந்தெரியாத நபர்கள் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துச்சென்றதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரவு 11.30மணியளவில் தங்களது வீட்டுக்கு முன்பாக குறித்த நபர்கள் நின்று சத்தமிட்டு அழைத்ததாகவும், தான் வெளியில் சென்றபோது மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறுபேர் வந்திருந்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர்கள் முகக் கவசம் அணிந்திருந்ததோடு,  தலைக் கவசத்தினாலும் முகங்களை மறைத்திருந்தனர் எனவும், அவர்களிடம் ரி 56 ரக துப்பாக்கிகளும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் மோட்டார் சைக்கிளில் இலக்க தகடுகள் மறைக்கப்பட்டிருந்தது. தேவையற்ற வேலைகளை செய்வதை நிறுத்தவேண்டும் என கோரியதோடு, மறைக்கப்பட்டிருந்த தீவுச்சேனை விவகாரம் தொடர்பில் கதைப்பதற்கோ அதனை மறுபடியும் தோண்டியெடுப்பதற்கோ நீங்கள் எத்தனிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி, சமூக செயற்பாட்டாளரை கொலை செய்யவே வந்ததாகவும்,  ஆனால் முதலாவதாக  எச்சரிக்கின்றோம் என மர்ம நபர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அவர்களில் நால்வர் மட்டக்களப்பு பேச்சு வழக்கு தமிழை நன்றாக கதைத்தார்கள் எனவும் பின்னாலிருந்த இருவரும் அவர்களுக்குள் சிங்களத்தில் கதைத்துக் கொண்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் மிரட்டிய அவர்கள், மட்டக்களப்பில் நீங்கள் தான் பல தேவையற்ற விடயங்களை கதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களைப் போன்றவர்களுக்காக எமது ஆயுதங்களை பழையபடி தூசி தட்டவேண்டிய நிலைமை வந்திருக்கின்றது என தன்னை அச்சுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

மீண்டுமொரு தடவை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நிச்சயமாக உங்களை கொல்லுவோம் என மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் நிச்சயமாக அரசுடன் இயங்குகின்ற அரச புலனாய்வும் அரசுடன் உள்ள ஒட்டுக்குழுக்களையும் தவிர வேறு எவராலும் மேற்கொள்ளமுடியாது என்பதை திட்டவட்டமாக தான் சொல்லவிரும்புகின்றேன் என சமூக செயற்பாட்டாளரான வி.லவக்குமார் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply